![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/vl5uQs2BYFnCxFkUb4Pqr92GS2gRnCBiJ6zcYG6QAzI/1577776268/sites/default/files/inline-images/raja_24.jpg)
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாகவும் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிற அளவுக்கு காங்கிரஸைச் சேர்ந்த நெல்லை கண்ணனுக்கு எப்படி துணிச்சல் வந்தது. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது நெல்லை கண்ணனின் கருத்தா, அல்லது காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் திட்ட இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை. நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது குறித்து பாஜகவினர் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க உள்ளனர்’’ என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.