மக்கள் நீதி மய்யத்தின் 2ம் ஆண்டு துவக்கவிழா இன்று நெல்லையில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த விழாவில் பங்கேற்க காலை 10 மணிக்கே நெல்லை வந்தடைந்தார். பின்னர் சவலாப்பேரியில் உள்ள மறைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் ஆறுதல் கூறினார்.

மாலை 6 மணியளவில் துவங்கப்பட்ட விழாவிற்கு தமிழகம் எங்கிலும் இருந்து அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ’’காந்தி, நான் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்றார். அதனால்தான் அவர் ரூபாய் நோட்டின் மூலமாக எல்லோருக்கும் தெரிகிறார். அதனால்தான் அவரை நான் தேர்ந்தெடுத்தேன். அஹிம்சை என்பது பெரிய வீரம். அதற்கு துணிச்சல் வேண்டும்.

பல விற்பன்னர்கள் பல துறைகளில் மறைந்து கிடக்கிறார்கள். அவர்களை நசுக்கும் ஆட்சியாளர்களை இறக்க வேண்டும். தமிழகத்தை மாற்ற வேண்டும். அது மாறும். அது திமிர் அல்ல; தன்னம்பிக்கை. புதிய தமிழகம் உருவாக வேண்டும். உண்மையான மக்களாட்சி என்பதை இந்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளட்டும். சுப்பிரமணியன் மாதிரி உயிர்தியாகம் செய்பவர்களை அனுப்ப வேண்டும். அதுதான் பெருமை. மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அரசுகள் மறந்துவிட்டன. உங்களுக்கு நான் முக்கியமாக காட்டுவது என் உள்ளத்தை. என் நேர்மையை. அதனால்தான் சரியாக வரி கட்டவேண்டும் என்று முடிவெடுத்தேன். சாகும்போது சொத்து கூட வராது. சொத்து என்பது அடிமட்ட தொண்டன்தான்.

அடிப்பது கொள்ளை என்பது உங்களுக்கு தெரியாதா? என்று தொண்டர்களை பார்த்து விரல் நீட்டினார். அப்போது, கரகோஷம் எழுந்தது. சிறிய இடைவேளைக்கு பின்னர் பேச்சை தொடர்ந்தவர், கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள். தமிழகத்தை அடக்க ராணுவத்தை அனுப்புகிறேன் என்கிறது அரசு. ராணுவத்தை அனுப்பினால் என் தம்பி சுப்பிரமணியன்தான் வருவார்.

குரங்கு ஆட்டம் போட்ட மாதிரி எங்களை குட்டுவைக்க முடியாது. மக்களின் நலமே மய்யத்தின் கொள்கை. சமத்துவம் காப்போம். அரசு இயந்திரங்களின் குறைகளை அகற்ற வேண்டும். நம் நிலம் காப்போம். பயந்தவனுக்கு ஒளியெல்லாம் நெருப்பாய் தெரியும். அது சுடும். என்னைப்பார்த்து பிஜேபியின் B டீம் என்கிறார்கள். நான் யாருக்கும் B டீம் அல்ல. நான் A டீம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். நீங்கள் வல்லவர்கள் . நிரூபிக்க வேண்டும் என்றவர், இந்த பாராளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியம் என்றார்.

