Skip to main content

அடிக்கடி கூரையை சேதப்படுத்திய அண்டை வீட்டு தென்னை மரம்; வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023
nn

 

மயிலாடுதுறையில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் வளர்த்து வந்த தென்னை மரத்தின் தேங்காய் விழுந்து அடிக்கடி மேற்கூரை உடைவதாக ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தென்னை மரத்தை அகற்றிவிட்டு கொய்யா மரத்தை நட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எனது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி பக்கத்து வீட்டுக்காரரின் தென்னை மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து தேங்காய்கள் விழும்போது என் வீட்டின் மேற்கூரை சேதம் அடைகிறது. இப்படி அடிக்கடி தேங்காய் விழுவதால் மேற்கூரை சேதம் அடைவதால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. தென்னை மரத்தை அகற்ற வேண்டும் என அளித்த மனுவை ஏற்றுக் கொண்ட வருவாய் அதிகாரி தென்னை மரத்தை அகற்ற வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் வருவாய் அதிகாரி உத்தரவுப்படி அந்த தென்னை மரம் அகற்றப்படவில்லை. இதனால் மரத்தை அகற்ற டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு தொடர்பாக தென்னை மரத்தின் உரிமையாளர் கலியமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கப்படாததால் வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் தென்னை மரத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொய்யா மரத்தை வைக்க வேண்டும் என தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்