சேலத்தில், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி நீட் தேர்வுக்கு நேரடி பயிற்சி அளித்த தனியார் பயிற்சி மையத்தைப் பூட்டி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து வகை கல்வி நிலையங்களும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீட், ஜேஇஇ உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், நீட் தேர்வுக்கு தினமும் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் தலைமையில் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்திற்கு புதன்கிழமை (ஏப். 28) நேரில் சென்று விசாரித்தனர். அவர்கள் ஆய்வுக்குச் சென்றபோதும் சில மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சிக்கு வந்திருந்தனர். மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும் அமர்ந்திருந்ததும் தெரிய வந்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நேரடி பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மீறி பயிற்சி மையத்தை இயக்கியதற்காக அதன் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அப்பயிற்சி மையத்தை உடனடியாக பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பயிற்சிக்கு வந்திருந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகக்கவசம் அணியும்படியும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.
சேலம் மாநகரில் அரசின் தடை உத்தரவை மீறி செயல்படும் பயிற்சி மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.