Skip to main content

வேளாண் சட்டங்கள்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

NATIONAL FARMERS DAY DMK MKSTALIN STATEMENT

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்று நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நமது நாட்டில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும், தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

விவசாயிகளின் நலமான வாழ்வும், இந்த நாட்டின் உணவுப்  பாதுகாப்புக்கான வளமான விவசாயமும் எப்போதும் ஒளிமிகு எதிர்காலமாகத் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு.

 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்தது போன்றவற்றை பல்வேறு சாதனைகளை நடத்திக் காட்டிய திராவிட முன்னேற்றக் கழகம், என்றென்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் வேளாண் முன்னேற்றத்திற்காகவும் விவசாயிகளின் உற்ற துணையாக இருந்து, தோளோடு தோள் நின்று போராடும்.

 

பிரதமராகவும்- விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்து விவசாயிகளுக்குப் பெரும் நன்மைகளைச் செய்த மறைந்த சரண்சிங்கின் பிறந்த நாள்தான் இன்று (23.12.2020), தேசிய விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது- மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியில் திட சித்தத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

"விவசாயிகள் விரும்பாத இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறேன்" என்று இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்றிப் பாதுகாத்திடப் பிரதமர், எவ்விதத் தயக்கமும் இன்றி முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்