என் இஷ்டப்படி வாழ தடையாக இருந்ததால் ரகசிய காதலனை சேலையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக, நாமக்கல் அருகே கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
விவசாயியான செல்வராஜ், கூடுதல் வருமானத்திற்காக சொந்தமாக இரண்டு ஆம்னி வேன்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், பரமத்தி வேலூர் அருகே உள்ள கோலாரம் பாலக்கரையைச் சேர்ந்த சுதா (வயது 45) என்பவர் வீட்டில் செல்வராஜ், இறந்து கிடப்பதாக அவருடைய மனைவி கலாமணிக்கு தகவல் கிடைத்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களை அழைத்துக்கொண்டு, நிகழ்விடத்திற்குச் சென்றார். அங்கு தனது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து அவர், தனது கணவருடைய இறப்பில் சந்தேகம் உள்ளதாக நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலம், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலம் கிடந்த வீட்டின் உரிமையாளரான சுதாவிடம் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மர்மமான முறையில் இறந்து கிடந்த செல்வராஜூக்கும், சுதாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அவர் கணவரை பிரிந்து, தன் ஒரே மகனுடன் தனியாக வசித்து வருகிறார். செல்வராஜ் எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
அவர்கள் இடையேயான ரகசிய உறவு, சீராக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென்று சுதாவுக்கு இன்னொரு ஆணுடனும் நெருங்கிப் பழகத் தொடங்கினார். அந்த புதிய நபரை சுதா, வீட்டிற்கு வரவழைத்து 'நெருக்கமாக' இருந்ததை செல்வராஜ் நேரில் பார்த்து, கண்டித்துள்ளார். உடனடியாக அந்த தொடர்பை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் செல்வராஜ், குடிபோதையில் அவரை தாக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில்தான், செல்வராஜ் உயிருடன் இருக்கும்வரை தன் இஷ்டப்படி வாழ முடியாது என்று யோசித்த சுதா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்.
தனது திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்த சுதா, ஜூலை 7- ஆம் தேதி, செல்வராஜிடம் சகஜமாக பேச்சுக்கொடுத்து, தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவரை அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறியதால் அவர் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து சுதா, தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, செல்வராஜின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார். யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக நாடகமாடியிருக்கிறார்.
இதையெல்லாம் விசாரணையின்போது சுதா தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். இதையடுத்து, சுதாவை கைது செய்த காவல்துறையினர், பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்த துணிகரச் சம்பவத்தில் சுதா மட்டும்தான் ஈடுபட்டாரா? அவருடைய புதிய காதலனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் வரை காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் காவல்துறையினர் கூறினர்.