தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா தன்னுடைய ‘நந்தா’ திரைப்படத்தில், தமிழக திரும்பிய இலங்கைத் தமிழர்களை, மாவட்ட ஆட்சியர் ‘அகதிகள்’ என்று குறிப்பிடும் போது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் தாய்மண்ணைச் சேர்ந்த ராஜ்கிரண் அந்த மா.ஆட்சியரை இடையில் தடுத்து நிறுத்தி சொல்திருத்தம் செய்வார். இலங்கைத் தமிழர்களை ‘சொந்தத் தாயகம் திரும்பியவர்கள்’ என்று.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய்மண் திரும்பிய இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமும், அவர்கள் நலனில் உள்ள அக்கறை காரணமாக இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவும் அமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவின் தலைவர் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், துணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி, உறுப்பினர். செயலராக மறுவாழ்வுத்துறை இயக்குனரும் இருப்பார்.
இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழு உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியும், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் மறுவாழ்வு தேடுவோருக்கான ஐக்கிய நாடுகளின் தூதரக களப்பணி அலுவலகத் தலைவர், மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கோவி.லெனின் அவர்களும், கல்வியாளர்கள் என்ற முறையில் முனைவர் கே.எம்.பாரிவேலன், முனைவர் ஈ.ரா.இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் என்ற முறையில் வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரமும், முகாமில் வாழும் இலங்கைத்தமிழர்களின் பிரதிநிதியாக தமயந்தி, முகாம்களில் சேவையாற்றிவரும் மூன்று தொண்டு நிறுவனங்கள் என மிகப் பெரிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வர், இக்குழுவிற்கான பணியைத் தெளிவாக வரையறுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அவர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கானத் திட்டங்களை செயல்படுத்துவதே இந்தக் குழுவின் பணி.
முகாம்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 937 இலங்கைத் தமிழர் குடும்பங்களும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரத்து 553 குடும்பங்களையும் பாதுகாத்து மேம்படுத்தி, அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றுத் தருவதுதான் குழுவின் செயல் திட்டம்.
1. இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் வசிப்பிடம்-குடிநீர்-சாலை-மின்வசதி-மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
2. அவர்களுக்கான, கல்வி- வேலைவாய்ப்பு- திறன் வளர்ப்பு- அரசுத் திட்டங்கள் அடிப்படையிலான உதவிகள், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றைப் பாலின பேதமின்றி உறுதி செய்தல்.
3. சட்டப்பூர்வ அங்கீகாரமின்றித் தாய்த் தமிழகத்தை நாடிவந்த இலங்கைத் தமிழர்களுக்கான நெருக்கடிகள், குடியுரிமைச் சிக்கல்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போக விரும்புபவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட சட்டரீதியான நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துதல்.
இந்த மூன்று அம்சங்களையும் முதன்மையாகக் கொண்டு, அதற்கேற்ப சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி, இலங்கையிலிருந்து தாய் மண் வந்த தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதே இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவினர் மேற்கொள்ள வேண்டிய பணி.
“இலங்கை அகதிகள் முகாம்” என்று இருந்ததை, “இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றம் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெயரில் உருவாக்கிய மாற்றத்தை, செயலில் உருவாக்கும் பணியை வழங்கியிருக்கிறார் முதல்வர்.
- சுந்தர் சிவலிங்கம்