நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள குருக்கத்தியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியார் உடன் நாகை செல்ல ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ புத்தூர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி உள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. ஆட்டோவில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து கைக்குழந்தையை வைத்திருந்த பெண்ணை முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்த மற்றொரு காவலர் ஒருவர் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டார். மேலும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக காவல்துறை வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு எஸ்.பி அனுப்பி வைத்தார். நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண் மற்றும் கைக்குழந்தையை காவல்துறை வாகனம் மூலம் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. காவல்துறையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.