கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை இனிதே கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி இருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சாலையில் வங்கக்கடலோரம் அமைந்திருக்கும் வேளாங்கண்ணி மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்ற ஆலயமாக இருந்து வருகிறது. இவ்வாலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினசரி வந்து போவது வழக்கம். இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29- ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 05.45 மணிக்கு பேராலயத்தில் திருக்கொடி பவனி நடந்தது.

தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்தார். பின்னர் கொடி ஏற்றப்பட்டது. நாளை முதல் வரும் 7 ம் தேதி வரை விண்மீன் ஆலயம் பேராலய மேல்கோயில், பேராலய கீழ்கோயில், உள்ளிட்டவற்றில் தமிழ், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ,ஆகிய மொழிகளில் திருப்பலி நடக்க இருக்கிறது. இதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 7- ஆம் தேதி பெரிய தேர்பவனியும், 8- ஆம் தேதி திருக்கோயில கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும், யாத்ரீகர்களும் நடைப்பயணமாக வேளாங்கண்ணி நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ரயில்கள், பஸ்கள் வாயிலாகவும் பக்தர்கள் வேளாங்கண்ணி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா துவங்கியதாலும், பொதுமக்கள், பக்தர்களின் வருகையாலும், மாதா ஆலயம் உள்ள வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் விழா கோலம் பூண்டுள்ளது.