Skip to main content

வனக் காப்பாளரை தாக்கிய மர்ம நபர்கள்... தேடுதல் வேட்டையில் அலுவலர்கள்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

  

Mysterious persons who attacked the forest ranger officers in the search hunt

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்திலி வனச்சரக அலுவலகம். இங்கு வனக்காப்பாளராகப் பணி செய்துவருபவர் சிவகுமார். இவர், நேற்று மாலை மலைக்கோட்டாலம் என்ற வனப் பகுதியில் ரோந்துப் பணி காரணமாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது, மலைக்கோட்டாலம் வனப்பகுதியில் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், வனப்பகுதியில் இருந்து மணலை அள்ளி அரைமூட்டையாகக் கட்டி கொண்டு சென்று தன் விளைநிலத்தில் சேமித்து வைத்துள்ளார். இதனைக் கண்ட வனக்காப்பாளர் சிவகுமார் இதுபோன்று ஏன் திருட்டுத்தனமாக மணல் அள்ளி சேமித்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, மணல் அள்ளிய அந்த நபர் உட்பட அங்கிருந்த மேலும் 10 பேர், வனக்காப்பாளர் சிவகுமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த சிவகுமார், இந்திலி வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வனச்சரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் அலுவலர்கள் மலைக்கோட்டாலம் பகுதிக்கு விரைந்து சென்று சிவகுமார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.