
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா (35) இருவரும் நேற்று (08.07.2021) இரவு தங்களது வீட்டிலுள்ள அறையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்தபடி படுத்து உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டின் பின் வழியாக நுழைந்து, சரிதாவின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை கட்டர் மூலம் வெட்டி பறித்துள்ளார். கழுத்தில் ஒருவகை உணர்வு தெரிந்த நிலையில் சரிதா கண்விழித்துப் பார்த்தபோது தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, ஒருவர் பின்பக்க வாசல் வழியாக ஓடியுள்ளார். அதிர்ச்சியடைந்த சரிதா கத்திக் கூச்சல் போட, சப்தத்தைக் கேட்டு அவரது கணவர் பாலமுருகன் எழுந்து மர்ம நபரைப் பிடிக்க முயற்சித்தார். மேலும், இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து மர்ம நபரைப் பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. அதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் டி.எஸ்.பி மோகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோல் விருதாச்சலம் ஏனாதிமேடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை நேற்றிரவு (08.09.2021) மது விற்பனை முடிந்த பின்பு, விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை விற்பனைக்காக திறந்து உள்ளே சென்றபோது, சுவரில் ஓட்டை இருந்ததுடன் மது பாட்டில்கள் சிதறிக் கிடைப்பதைக் கண்ட விற்பனையாளர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். விசாரணையில், மதுபான கடைக்குப் பின்புறமுள்ள சுவரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை, உடைத்துவிட்டு 65 ஆயிரம் மதிப்புள்ள விலையுர்ந்த 480 மது பாட்டில்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், பிரபு என்பவருக்கு சொந்தமான லாரியில் கடந்த 6ஆம் தேதி செங்கல்களை ஏற்றிக்கொண்டு திருவாரூருக்குச் சென்று, அங்கு இறக்கிவிட்டு அதற்கான தொகை 93 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மாலை திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டார். இரவு 11 மணியளவில் கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கைகாட்டி அருகே சென்றபோது லாரியின் பின்னால் திடீரென சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அண்ணாமலை லாரியை நிறுத்திவிட்டு இறங்கி சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அண்ணாமலையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 93 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.