Skip to main content

“காந்தியைக் கொன்ற வெறி இன்னும் அடங்கியபாடில்லை!” -சிவகாசியில் முத்தரசன் விளாசல்!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

 

mutharasan election campaign in sivakasi

 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலானது ஏதோ இரு கட்சிகளுக்கான போட்டி அல்ல. அல்லது,  இருநபர்களுக்கான போட்டி அல்ல. இந்தத் தேர்தலானது,  ஒரு மாபெரும் அரசியல் யுத்தமாகும். அப்படி ஒரு யுத்தத்தை நடத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஒரு அரசியல் யுத்தமாக இதைப் பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒரு பிரச்சனையாகப் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தோமேயானால், தவறான முடிவுகளுக்கு வழிவகுத்துவிடும். எதிர்க்கட்சி தரப்பில் பேசுகின்ற  முதலமைச்சர் உள்ளிட்ட அத்தனைபேரும், நாட்டிலுள்ள பிரச்சனைகள் குறித்தோ, தங்களுடைய ஆட்சியில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் குறித்தோ பேசுவதற்கு மாறாக, தனிநபர் தாக்குதலைத் தொடுத்து, பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும்விதமாக, எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

 

mutharasan election campaign in sivakasi

 

பட்டாசுத் தொழில், அச்சுத் தொழில், தீப்பெட்டித் தொழில் பாதிப்பு மட்டுமல்ல. விவசாயத்திலும் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஒருகுடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதையெல்லாம் தடுப்பதற்கு வக்கற்ற அரசாங்கமாக இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் இருக்கிறது. 

 

 

அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு  மாறாக அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆட்சி நடத்திக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்திருக்கிற அமைப்புக்களையெல்லாம் சீர்குலைக்கக்கூடிய நடவடிக்கைகளை மோடி சர்க்கார் செய்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரமாக, ஒரு பாசிச ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். தேசப்பிதா மகாத்மா காந்தி கொல்லப்பட்டது எல்லாருக்கும் நினைவில் இருக்கும். நாடு விடுதலை பெற்றபிறகு, ஆறுமாதம்கூட இந்த தேசத்தில் அவரால் உயிர்வாழ முடியவில்லை. சுட்டுக்கொன்றார்கள். யார் சுட்டுக்கொன்றது என்று அனைவருக்கும் தெரியும். மோடி இருக்கிற கட்சியைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்ற கொடியவன்தான் காந்தியைச் சுட்டுக்கொன்றான். அந்த வெறி இன்னும் அடங்கியபாடில்லை. நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்திக்கே இந்த நிலை என்றால், இந்த ஆட்சி யாருடைய ஆட்சி? மகாத்மா காந்தியை ஏன் கொன்றார்கள்? மதச்சார்பற்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். பா.ஜ.க. தலைவர்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல் என்பதே நடைபெறாது என்கிறார்கள். இதன் பொருள் என்ன? இனிமேல் இந்த நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே நாட்டில் இருக்கும் என்பதுதான். . இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒருபோதும் பாசிசத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கான தேர்தலாகத்தான் நாம் பார்க்க வேண்டும். 

 

 

காவிரி நதிநீர் விவகாரத்தில் இறுதியாக  வழங்கிய தீர்ப்பில் இதற்கென ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறியது உச்சநீதிமன்றம்.  ஆனால் இதுவரை நிரந்தரமாக ஒரு தலைவரை மொடி அரசு அமைக்கவில்லை. எடப்பாடி சர்க்காரும் அதைக் கேட்கவில்லை. கர்நாடகாவில் மேகதாது  அணை கட்டுவதற்கு அனுமதி தர முடியாது என்று கூறாமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்தது மோடி அரசு. அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக. 

 

 

அதிமுகவை மிரட்டிப் பணிய வைத்து ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது பா.ஜ.க.  இன்னொரு கட்சி ரூ.400 கோடி விலைபேசி  வாங்கப்பட்டது. இன்னொரு கட்சியில் என்ன நடக்கிறது என்று அந்தக்கட்சியின் தலைவருக்கே தெரியாது. ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, முதலமைச்சர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று எடப்பாடி பாடுபடுகிறார். எங்கள் கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி.  

 

இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து வார்த்தைக்கு வார்த்தை விளாசினார் முத்தரசன். 

 


 

சார்ந்த செய்திகள்