சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவர் மீது 3க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி யுவராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் குமரேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதைத்தெரிந்த கொண்ட குமரேசனின் எதிரிகள் சிலர் அவரை கொலை செய்வதற்காக அவரை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரும், யுவராஜ் கொலை வழக்கிற்காக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு, சூளைமேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே எதிரே உள்ள ஒரு ஓட்டலில் உணவு அருந்திவிட்டு, குமரேசன் மற்றும் ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது எதிரிகள் குமரேசனை கொலை செய்ய 4 பேர் கொண்ட கும்பல் முயன்றுள்ளது. இதைத்தெரிந்து கொண்ட குமரேசன் பதற்றத்தில் வைஷ்ணவா கல்லூரி அருகே ஓடினார். இருந்தும் அவரது எதிரிகள் அவரை விடாமல் துரத்தி சென்று உடல்களின் பல்வேறு பாகங்களில் கத்தியால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குமரேசன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான ரவுடி யுவராஜீன் கூட்டாளிகள் தான் குமரேசனை கொலை செய்திருக்ககூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.