ஐகோர்ட் உத்தரவின்படி மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையையும் மீறி கூட்டம் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பாரதிசாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் ஆய்வு செய்தார்.
நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் பாரதி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.