முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவு அமலிலிருந்தாலும், சில காரணங்களால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அணை பலவீனமாக இருக்கிறது, உடைய வாய்ப்பிருக்கிறது போன்ற அவதூறுகளைக் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தமிழக அரசு தேக்கி வைக்காமல் உள்ளது. இந்நிலையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக வரும் 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ''திமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியைத் தேக்க பல்வேறு இடையூறுகள் கேரளாவில் இருக்கின்ற அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் தமிழக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தமிழக மக்களுக்கு நினைவூட்டுகிறோம்'' என்றார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கும் நிலையில், வரும் நவ். 5 ஆம் தேதி நேரில் சென்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையை ஆய்வு செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.