Skip to main content

முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரும் தமிழனுக்குத்தான் சொந்தம்! இயற்கையின் நீதி!!

Published on 13/08/2018 | Edited on 14/08/2018
i

 

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களில் இடுக்கி மாவட்டம் உள்பட எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதந்து வருகிறது. இடுக்கி அணை உள்பட 22 அணைகளும் திறக்கப்பட்டு பல நகரங்களிலும் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்து வருகிறார்கள். அதுபோல் இருபத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டும் இருக்கிறது. 

 

இந்த நிலையில்தான் கர்னல் பென்னிகுக் கட்டிய  முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. கடந்த இருபது நாட்களாகவே 136 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஆக கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வராது என்பதே இயற்கையே கேரளா மக்களுக்கு நிரூபித்துவிட்டது.

 

m

 

 தென் மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், வறட்சியையும் மனதில் வைத்துத்தான் முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டினார். அதுபோல் திருநெல்வேலி, செங்கோட்டை பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான இச்சிவகிரியிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தேக்கடி வரை மழை பெய்தால்  மட்டுமே அந்த தண்ணீர் இயற்கையாகவே தமிழகத்திற்குத்தான் போகும்.  அப்படி தமிழகத்திற்கு போகும் தண்ணீரை முக்கியமாக வைத்துத்தான் முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டியிருக்கிறார். அதனால்தான் தற்போது பெய்து வரும் கனமழையால் கேரளாவே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது முல்லைப் பெரியாறு அணைக்கு அந்த கேரளாவில் பெய்து வரும் மழையிலிருந்து ஒரு கன அடி தண்ணீர் கூட அணைக்கு வரவில்லை. அந்த அளவுக்கு அணையும் அதற்கு வரக்கூடிய தண்ணீரும் தமிழனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் தான் அப்பொழுதே அணையை கட்டியிருக்கிறார் பென்னிகுக். அது தெரியாமல் மலையாளிகள் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை மட்டுமே தமிழ்நாட்டிற்கு சொந்தம். அதில் வரக்கூடிய தண்ணீர் கேரளாவிற்கு சொந்தம் என இதுவரை பொது பிரச்சாரம் செய்து வந்த சிலர் இனிமேலாவது வாய் திறக்காமல் இருப்பார்கள். 

 

இதுபற்றி முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளரான கம்பம் முத்தையாவிடம் கேட்டபோது... "முல்லைப் பெரியாறு அணையில் தேங்கும் தண்ணீரை விட ஐந்து மடங்கு அதிகமாக இடுக்கி அணையில் தண்ணீரை தேக்கலாம். அதன்மூலம் மின் உற்பத்தி மட்டுமே செய்ய முடியும் விவசாயத்திற்கு பயன்படுத்துவது இல்லை.  அப்படிப்பட்ட தண்ணீரை கடலுக்கே திருப்பி விடுகிறார்கள். அதனால்தான் மின் உற்பத்திக்காக கூடுதல் நீரை இடுக்கி அணைக்கு கொண்டு வர பெரியார் அணை நீர் மட்டத்தை 150 அடியிலிரந்து குறைக்க வேண்டும் என கேரளா அரசும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து நாடகம் நடத்தி வந்தனர். இதனால் மொத்த உயரம் 136 அடியாக குறைத்து தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர்வரத்தும் 142 அடியாக உச்சநீதிமன்றம் மூலம் உயர்த்தப்பட்டுள்ளது. இடுக்கி அணைக்கு பெரியார் அணை தண்ணீர் வந்தால் பாதிப்பும் மேலும் அதிகமாகும் என கேரளா மக்களை இந்த மழை மூலம் உணரச் செய்துள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் இடுக்கி அணையை காப்பாற்ற பெரியார் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை மூலம் முல்லை பெரியாறு அணைக்கு தண்ணீர் வரவில்லை என்பதை இயற்கையே உணரச் செய்துவிட்டதால் முல்லைப் பெரியாறு அணையில் அதில் வரும் தண்ணீரும் தமிழனுக்கே சொந்தம் என்பதே இயற்கை நிரூபித்துவிட்டது  என்பதுதான் உண்மை!

சார்ந்த செய்திகள்