நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 07-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் போராட்டங்களங்களில் அயராது பங்கேற்று வந்த சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முகிலன் அவர்கள் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்றப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொளி ஆதாரத்தினைச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட பிப்ரவரி 15 அன்று முதல் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தமிழகமெங்கும் அடையாளப்போராட்டங்களும், ஆட்கொணர்வு மனுவின் வாயிலாக சட்டப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட வேளையில், தற்போது வெளியாகியிருக்கிற காணொளியின் மூலம் அவர் ஆந்திரக்காவல்துறையின் வசமிருப்பது உறுதியாகியிருக்கிறது.

எனவே, சகோதரர் முகிலனை விரைவாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பும் அளித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.