நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மருமகள் மாமியார் இடையே ஏற்பட்ட சண்டையில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி. ஆட்டோ ஓட்டி வந்த பிரேம்குமார் டிவி ஷோரூமில் பணியாற்றி வந்த மஞ்சுளாவை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருமகள் மஞ்சுளாவை நன்கு கவனித்து வந்த மாமியார் சித்ரா, மஞ்சுளா அணிந்திருந்த 15 சவரன் நகைகளில் 12 சவரன் நகையை அவசர தேவைக்காக கேட்டுள்ளார்.
மஞ்சுளாவும் மாமியார் சித்ராவிற்கு நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நகையை திரும்பத் தரும்படி மாமியார் சித்ராவிடம் மஞ்சுளா கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பாசத்தை பொழிந்த மாமியார் சித்ரா மருமகள் மீண்டும் நகையை கேட்டதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அடிக்கடி மாமியார் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மணிமங்கலத்தில் தனியாக வீடு எடுத்து பிரேம்குமாரும் மஞ்சுளாவும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கணவன் பிரேம்குமாரிடம் நகையைக் கேட்டு வாங்கி தரும்படி மஞ்சுளா கேட்ட பொழுது பிரேம்குமாருக்கும் மஞ்சுளாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால் வீட்டின் அறைக்குள் சென்ற மஞ்சுளா பல மணி நேரமாகியும் வெளியே வராததால் பிரேம்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்துக் கொண்டு சென்ற பொழுது உள்ளே மின்விசிறியில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஞ்சுளாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து, உடனடியாக தன்னுடைய மகளின் உயிரிழப்பு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.