Skip to main content

கொத்துக் கொத்தாக இறந்து கிடந்த குரங்குகள்... சோகத்தில் மக்கள்...

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

Monkeys lying dead cuddalore

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் கருவேப்பிலங்குறிச்சி அருகே வனத்துறைக்குச் சொந்தமான பரந்து விரிந்த காப்புக்காடு உள்ளது. 2,000 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் காடுகளில் மயில்கள், மான்கள், காட்டுப் பன்றிகள், குரங்குகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளில் வாழும் வனவிலங்குகள் சாலை ஓரத்தில் வருவதும் அதைக் கடப்பதும் வழக்கம். 


இந்தச் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இப்பகுதியில் வாழும் குரங்குகளுக்கு உணவுப் பண்டங்களை, பழங்களைக் கொண்டுவந்து அவ்வப்போது போடுவார்கள். அந்த உணவுப் பண்டங்களை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடும். இதைக் கண்டு சந்தோஷம் அடைவார்கள். அந்தப் பகுதிகளில் செல்லும், அனைத்து வாகன ஓட்டிகளும் வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்வார்கள். அங்கு வாழும் குரங்குகளுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செல்வது வாடிக்கை. 


இந்த நிலையில், சாலையின் ஓரம் 12க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்துள்ளது. இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன்படி அங்கு சென்ற காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். பின்பு அவர்கள் அளித்த தகவலின் பேரில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி கால்நடை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று இறந்த குரங்குகளை உடற்கூறாய்வு செய்தனர். 


குரங்குகள் எதனால், ஏன் இறந்தன? இதற்குக் காரணம் பொதுமக்கள் கொடுத்த உணவுகளில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டதா? அனைத்துக் குரங்குகளும் ஒரே வயதாக இருப்பதால், வேறு எங்கேனும் குரங்குகளைக் கொன்று, இங்கு கொண்டுவந்து வீசிவிட்டுச் சென்றார்களா? எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குரங்குகள் மத்தியில் ஒரு குரங்கு மட்டும் மயக்க நிலையில் இருப்பது தெரியவந்தது. 

 

cnc


அது மரத்தில் ஏற முயன்று கீழே விழுந்தது. இந்தக் காட்சி, சாலையில் சென்ற பொதுமக்களைக் கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பேசுகையில், "வன விலங்குகளுக்கு உணவு கொடுக்க விரும்புகிறவர்கள், தரமான சுத்தமான நல்ல உணவுப் பொருட்களை, பழங்களைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். கெட்டுப் போன உணவுப் பொருட்களை கொடுக்கக்கூடாது.

 

அதுபோன்ற கெட்டுப்போன உணவுகள் மனிதர்களுக்கே விஷமாக மாறிவிடும் நிலையில், அதேபோன்று வனவிலங்குகளையும் குரங்குகளையும் பாதிக்கும். அதனால், தயவு செய்து கெட்டுப்போன உணவுப் பண்டங்களைப் பழங்களை வன விலங்குகளுக்குப் போடாதீர்கள் நீங்கள் உணவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவை காடுகளில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளைச் சாப்பிட்டு உயிர் வாழும். தரமற்ற உணவுப் பொருட்களைக் கொடுத்து அதன் உயிர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடாது" எனக் கூறினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்