Skip to main content

கூட்டணிக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
mkstalin



சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது. அதிலே பங்கேற்ற குழுவினுடைய உறுப்பினர்கள் அத்துனைபேரும் தங்களுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். வர இருக்கக்கூடிய 2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒருவேளை சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் எப்படி அதை சந்திப்பது எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாள்வது என்பதைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறோம்.
 

ஏற்கனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருக்கின்ற தோழமை கட்சிகளின் நிலைமைகளைப் பற்றியும் பேசியிருக்கிறோம். என்ன தான் உயர்நிலைக் குழுவிலே பேசி முடித்திருந்தாலும் இதுகுறித்து விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி, அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இதயமாக இருக்கக்கூடிய பொதுக்குழுவிலே முடிவு எடுத்து தேர்தல் வருகின்ற நேரத்தில் அதுபற்றி உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம். 


 

mkstalin



செய்தியாளர்: தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றதா?
 

மு.க.ஸ்டாலின்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து, அதற்கென்று குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் அறிக்கை முறையாக தயாரிக்கப்படும். 
 

செய்தியாளர்: எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதா?
 

மு.க.ஸ்டாலின்: எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம்.
 

செய்தியாளர்: அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை எப்போது திறக்கப்படுகிறது?
 

மு.க.ஸ்டாலின்: தேதி முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு முறையாக உங்கள் அனைவரையும் அழைத்து தலைமைக் கழகத்தின் சார்பில் நானே அறிவிப்பேன்.
 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்