




மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்காக 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை வளர்க்கும் சீரிய தொலைநோக்கு பார்வையோடு செயல்படும் தமிழக அரசு, 2026ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் இரண்டு மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "என்னுடைய கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் தொடக்க நாள் இது என்பதால் இன்று என் வாழ்வில் கிடைத்த ஒரு பொன்னாள் எனத் தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களால் முதல்வராக்கப்பட்டுள்ள நான், தமிழ்நாட்டின் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வனாக்க உருவாக்கிய திட்டம்தான் இது என்றும் தெரிவித்தார்.