Skip to main content

“அவர்தான் கை கொடுத்தார். இப்போது அவரே...”- மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 17ஆம் தேதி இரவு சாரம், ரெயின்போ நகர்,  சாமிப்பிள்ளைதோட்டம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.
 

stalin

 

 

அப்போது அவர் பேசியதாவது, “இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது? என்பது உங்களுக்கு தெரியும். ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர். முதலமைச்சராக பதவியேற்ற நாராயணசாமி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் அவர்தான் கை கொடுத்தார். இப்போது அவரே ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நேரடியாக பாரதீய ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. புதுச்சேரியில் நேரடியாக நடக்காவிட்டாலும் கவர்னர் மூலம் மறைமுக ஆட்சி நடத்துகிறது. இதைத்தான் அப்போதே அண்ணா சட்டமன்றத்தில் ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டிற்கு கவர்னர் எதற்கு?’ என்றார்.  அதாவது ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு கவர்னரும் வேஸ்ட். இந்த மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய  நாராயணசாமி எத்தனையோ திட்டங்களை அறிவிக்கிறார். ஆனால் கவர்னர் கிரண்பெடி அதற்கு தடைக்கல்லாக தடுத்து நிறுத்தும் அயோக்கியத்தனத்தில் ஈடுபடுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக இலவச அரிசி வழங்காமல் இருப்பதற்கு கவர்னர்தான் காரணம். கவர்னர் பாரதீய ஜனதாவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.

அப்படிப்பட்ட நிலையில் பாரதீய ஜனதா ஆதரவோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு பச்சை துரோகி. இதை நான் சொல்லவில்லை. மறைந்த ஜெயலலிதாதான் அப்படி கூறினார்.

2011 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றிபெற்ற நிலையில் ரங்கசாமி அ.தி.மு.க.வை கழற்றிவிட்டுவிட்டு ஆட்சியை அமைத்தார். அப்போதுதான் ஜெயலலிதா அந்த வார்த்தையை கூறினார். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது பாரதீய ஜனதா. அந்த கட்சியோடு ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்றார். ரங்கசாமியை பச்சை துரோகி என்றார். ஆனால் அவர்கள் இப்போது கூட்டணி வைத்து உள்ளனர். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற திட்டங்களை நாராயணசாமி உருவாக்குகிறார். ஆனால் அதை கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். புதுவையின் ஒரு பகுதியான ஏனாமை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வார்க்க கவர்னர் முயற்சி செய்கிறார். இது பச்சை துரோகம். மாநிலத்துக்கு துரோகம் செய்பவர்கள் கவர்னருக்கு ஆதரவாக உள்ளனர். நாம் முதலமைச்சர் நாராயணசாமியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

புதுச்சேரிக்கு ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் எங்களது போதாத காலம் எடுபிடி முதலமைச்சர் கிடைத்துள்ளார். அவர் விபத்தில் வந்தவர் என்று நான் கூறினால் அவருக்கு கோபம் வருகிறது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்கிறார். ஜெயலலிதா மறைந்ததால் அவர் முதலமைமைச்சர் ஆனார். அதுவும் முதலில் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் ஆனார். அவரது போதாத காலம் சட்டசபையில் என்னை பார்த்து சிரித்துவிட்டார். அதனால் அவரது பதவி போனது.
 

 

அதனைத்தொடர்ந்து சசிகலா முதலமைச்சர் ஆக தேதி குறித்தார்கள். அவர் பதவியேற்க இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வந்தது. அவருக்கு 4 வருடம் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சசிகலா இடிந்துபோனார். அந்த சமயத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று சக தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது காலில் கீழே ஏதோ ஊர்ந்துபோய் உள்ளது. கீழே பார்த்தால் எடப்பாடி பழனிசாமி மண்புழுபோல் நெளிந்து நெளிந்து வந்துள்ளார். இதை நான் சொன்னால் எடப்பாடி பழனிசாமி நான் விவசாயி என்கிறார். மண்புழு என்றால் வயலில் இருக்கவேண்டும். சசிகலாவின் காலில் விழுவதா மண்புழு?  தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் காலத்தில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அது எடுபிடி ஆட்சி. மத்திய அரசு சொல்வதை கேட்கக்கூடிய ஆட்சி.  மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கேள்வி கேட்காத ஆட்சி. தட்டிக்கேட்கும் திராணி தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆனால் புதுச்சேரியில் கவர்னரின் செயல்பாடுகளை புதுச்சேரி  நாராயணசாமி தட்டி கேட்கிறார்.  ஜனநாயகத்தை காக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். எதிர்த்தால் பதவிபோய்விடும் என்பதால் அடிமைப்பட்டு கிடைக்கிறார்கள். மேலும் அவர்களது முறைகேடுகள் எல்லாம் சி.பி.ஐ.யின் பிடியில் உள்ளது. பதவி போனால் அடுத்த நிமிடம் ஜெயிலில் இருப்பார்கள். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்