தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இன்னும் ஐந்து நாட்களுக்குப் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கும் நிலையில் சென்னை அடையாற்றில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த அரக்கோணத்தில் இருக்கக்கூடிய தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் அருண், 15 மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அதேபோல் சென்னையில் உள்ள அடையாற்றில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் போதிய அளவிலான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் பேரிடர் மீட்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு செய்தார். மாநிலம் முழுவதும் இருந்து மழைக்காலப் புகார்கள் இந்த மையத்திற்கு வருகிறது. அந்த அழைப்புகள் தொடர்பாகவும் புகார்களுக்கு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்தனர்.
முதல்வரின் ஆய்வில் அவர் அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை வழங்கியுள்ளார். அழைப்புகளுக்கு முடிந்த வரை வேகமாகப் பதில் கொடுங்கள் என்றும் பதில் கொடுக்காமல் இருக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவசரக்கால மையத்திற்கு வந்த அழைப்புகள் சிலவற்றை எடுத்து மக்களிடம் உரையாடி புகார்களையும் கேட்டறிந்தார்.