நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த 4ஆம் தேதி தனியார் தங்கும் விடுதி அருகே முகாமிட்டிருந்த காட்டு யானை ஒன்றின் மீது, டயரில் தீ வைத்து வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் யானை உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பாக அந்த தனியார் விடுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த தங்கும் விடுதி முறையாக அனுமதி பெறாமல், வீட்டிற்கான அனுமதி பெற்று வணிக நோக்கத்திற்காக தங்கும் விடுதியாக பயன்படுத்தி வந்தது தெரிவந்தது.
நேற்று (28.01.2021) ஊராட்சி சார்பாக மசினகுடியில் இவ்வாறு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மசினகுடி பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
யானை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தல்கள் வந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.