திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளுக்கு அதிகாரிகளின் தவறுகளே காரணம் என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
இது குறித்த அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் அதிக எடையோடு சரக்கு வாகனங்களை அனுமதிப்பதால் தினந்தோறும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் அதிக எடையோடு செல்லும் சரக்கு வாகனங்கள் பாதி வழியில் பழுது ஏற்படுவதாலும், விபத்துக்குள்ளாவதாலும் அந்த வழியே செல்லும் மற்ற அனைத்து வாகனங்களும் மேலேயும், கீழேயும் செல்ல முடிவதில்லை. இதனால் பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டு கார், பேருந்து மற்றும் மற்ற வாகனங்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் உண்ண உணவு இல்லாமல் பசியால் தவிக்கும் சூழல் உருவாகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இரவு நேரங்களில் நடக்கும் போது பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.
மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் பயந்து குலைநடுங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் காத்திருக்கும் போது வாகனங்களில் இருந்து இறங்கி வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மலைப்பகுதியில் ஏதோவொரு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி யாரோ ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னால்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்ற கேள்வி எழுகிறது.
டெம்போ, லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சரக்கு வாகனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எடைக்குள்தான் மலைப்பாதையில் செல்ல வேண்டும் என்ற அனுமதி இருக்கும் போது யாரோ ஒரு சிலருக்காக அதிகாரிகள் காட்டும் சலுகையால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளின் தவறுகளாலும், மேல் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் திம்பம் மலைப்பாதையில் தொடர்கதையாக மாறிப்போனது. சரக்கு வாகனங்கள் மலைப்பாதைக்குள் நுழையும்போதே சரியான எடையுடன் இருக்கிறதா என்று சோதனை செய்து அனுமதிக்கப்படும் போது இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியும். திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடைப்படாமல் செல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’