
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வடுகபட்டியை சேர்ந்த அருணாச்சலம் மகன் செல்வராஜ் (39) ஓய்வுபெற்ற ராணுவவீரர். இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலையில் இரும்புக்கடை நடத்திவருகிறார். அவரது கடையில் இறக்கி வைக்கப்பட்ட கம்பிகள் குறைந்து வந்தது. சந்தேகமடைந்து அவர் இருப்பு கம்பிகள் பற்றி கணக்கு ஆய்வு செய்த போது விற்பனை செய்யாமல் கம்பிகள் திருடப்பட்டு வருவது தெரியவந்தது.
அதனால் கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது நள்ளிரவில் கேமராவை துணியால் மறைத்து வைத்துவிட்டு, சிலர் கம்பிகளை திருடி செல்வது தெரியவந்தது.
இது குறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் காணாமல் போன கம்பிகள் இலுப்பூரில் ஒரு கடையில் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
அதில் இலுப்பூர் ஜாஹிர் ஹுசைன், புதுக்கோட்டை முருகேசன் ஆகிய இருவரும் மேட்டுச்சாலை இரும்புக்கடையில் கம்பிகளை திருடி இலுப்பூரிலுள்ள பல கடைகளுக்கு சப்ளை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 14-டன் இரும்புக் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் திருட்டு கம்பிகளை வாங்கியவர்கள் ஆளுங்கட்சி பிரமுகரின் பின்னணி கொண்டவர்கள் என்பதால் திருட்டு பொருள் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்றும், இவர்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் வேறு யாரும் உள்ளனரா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.