சேலம் மாவட்டம் கடை வீதியில் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது கட்டடங்கள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று (24.05.2023) ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் காந்தி, "கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தரமான ஜவுளிகள் தயாரிக்கப்பட்டதால் தற்போது 20 கோடி அளவுக்கு லாபம் ஈட்டப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 154 இடங்களில் கோ ஆப்டெக்ஸ் மையங்கள் உள்ளன. இதில் 105 மையங்கள் தமிழகத்திலும், 49 மையங்கள் வெளி மாநிலங்களிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 45 மையங்களில் தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைத்தறிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நெசவுத் தொழிலாளர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். கோ ஆப்டெக்ஸில் தற்காலிக பணியார்களாக பணிபுரிந்து வந்த 400 பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே குஜராத்திற்கு பிறகு தமிழகத்திற்கு 2வது இடம் என்று கூறிய நிலையில் தற்போது தமிழகம் குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு ஜவுளித் துறையில் முன்னேற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறினார்.