உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் அந்த வைரஸ் அரசுக்குச் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த சோதனை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இந்தியா வாங்கியது.
பின்னர் அந்தக் கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் பிரித்து வழங்கப்பட்டது. இந்தக் கருவிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் ரேபிட் கிட் தவறான முடிவுகளைக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அனைத்துக் கொள்முதல் ஆர்டர்களும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை. ரேபிட் கிட்டிற்கு இதுவரை பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
கருவிகள் திருப்பி அனுப்பப்படுவதால் தமிழக அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படாது. ரேபிட் கிட்களை, ஆந்திர அரசு 730 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அதேபோல் கேரள அரசு 699 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு 600 ரூபாய்க்குத்தான் வாங்கியது. மிகவும் குறைவான விலை மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிக குறைவான விலையில்தான் தமிழகம் வாங்கியுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்த அதே நிறுவனம் மற்றும் டீலரிடம்தான் ரேபிட் கிட் வாங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. மத்திய அரசு அனுமதிக்காத நிறுவனத்திடம் நாங்கள் வாங்கியதாக திமுக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது" எனத் தெரிவித்தார்.