ஈரோட்டில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் இரண்டு பேரை அ.தி.மு.க. ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே. வி. ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரீத்தி செய்தியாளர்களை கடுமையாக எச்சரித்ததோடு கொலை மிரட்டல் நடத்தி தாக்கி இருக்கிறார்.
ஈரோடு குமலன்குட்டை என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று மதியம் நடைபெற்றது. அப்போது, சென்ற வருடம் படித்த மாணவர்கள் எங்களுக்கும் அரசு வழங்கும் லேப்டாப் கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏக்கள் கே வி ராமலிங்கம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் லேப்டாப் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு வெளியே செல்ல முடியாதபடி மாணவ மாணவியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் வேறு வழி இல்லாமல் ஒரு வகுப்பறையில் போய் அமர்ந்து கொண்டனர். விடாமல் அந்த வகுப்பறைக்குள்ளும் சென்ற மாணவர்கள் எங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை படம் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்ஹிந்து செய்தியாளர் கோவிந்தராஜ் மற்றும் விகடன் நவீன் ஆகியோரை முன்னாள் அமைச்சர் கே. பி. ராமலிங்கத்தின் மகன் கடுமையாக தாக்கியதோடு அவர்களை கீழே தள்ளி காலால் உதைத்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும்போது எம்எல்ஏக்கள் கே. வி. ராமலிங்கம், தென்னரசு ஆகியோரும் அங்கு இருந்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கும் தயாராகி வருகிறார்கள்.