
ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்க உள்ள மாணவர்களுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாடினார்.
'P.E.T. பீரியட் நேரத்தில் வேறு வகுப்புகள் எடுப்பதைக் கைவிட வேண்டும்’ என மாணவி ஒருவர் கோரிக்கை வைத்தபோது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனைகளில் பணியைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொடுத்துள்ளார்கள். 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே முதல் இலக்கு. முதலமைச்சர் தங்கக் கோப்பை என்று ஒரு திட்டத்தை அறிவித்திருந்தோம். அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அதில் சிலம்பாட்டம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைச் சேர்த்து ஜனவரியில் இருந்து நடத்தலாம் எனத் திட்டம்.
பீச் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். ஏடிபி டென்னிஸ் போட்டி நடத்துவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்” என்றார்.