Skip to main content

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Minister tRb raja says cM MKStalin is going to America 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை வழங்கினார். அப்போது பேசுகையில், “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.  கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின. 

Minister tRb raja says cM MKStalin is going to America 

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு  ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது. மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சாத்தூர் வெடிவிபத்து; உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin announces relief to families of Chatur crackers victims

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20 அறைகள் கொண்ட இந்த ஆலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), மோகன்(50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்கு ரசாயன மூலப்பொருள் கலவை கலக்கும் பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பம்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.