கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.