சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. சுமார் 397 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.
இதையடுத்து, கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகும் மக்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (04-01-24) ஆய்வு செய்தார். அதன் பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்து இயக்கப்படாது. பள்ளி மாணவர்களை பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துக்கான பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.