Skip to main content

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு!- விரிவான விளக்கம் அளிக்க உத்தரவு!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014- ம் ஆண்டு வழக்கு  தொடர்ந்தார்.

minister rajendra balaji case chennai high court


அவர் தன் மனுவில், ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 35 ஏக்கர் நிலமும், அதுபோல திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டுமனைகளும் மற்றும் 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

அதன் அசல் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என கணக்கிடப்படும் நிலையில், தான் அந்த நிலங்களை வெறும் 1 கோடியே 15 லட்சத்துக்கு வாங்கியுள்ளதாக ராஜேந்திர பாலாஜி கணக்கு காட்டியுள்ளதாகவும், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

minister rajendra balaji case chennai high court

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி தலைமையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (13/02/2020) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமனியம், அமைச்சர் தொடர்பான புகார்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை தெளிவுபடுத்தி உள்ளதையும், அதனை ஏற்று இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை எவ்வளவு நாட்கள் மேற்கொள்ளலாம், யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்பது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞருக்கும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்