தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சாதிப் பெயரைசொல்லி வட்டார வளர்ச்சி அலுவலரைத் திட்டியது உள்ளிட்ட சில புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பனின் அரசியல் பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
எம்.ஜி.ஆர். மீது கொண்ட பற்றால் கடந்த 1972- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ராஜகண்ணப்பன். கட்சியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தார். கடந்த 1991- ஆம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறைகளைக் கவனித்து வந்தார்.
பின்னர், அ.தி.மு.க. எதிர்க்கட்சியான போது, அக்கட்சியில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், கடந்த 2000- ஆம் ஆண்டு 'மக்கள் தமிழ் தேசம்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 2001- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். கடந்த 2006- ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது, இளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், கடந்த 2009- ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த 2009- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. வாய்ப்பு வழங்காததால் மீண்டும் தி.மு.க.வுக்கு தாவினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரானார்.
முக்கிய துறைகளில் ஒன்றான போக்குவரத்துத்துறையைக் கவனித்த ராஜகண்ணப்பன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.