கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் ஊர்தி வாகனம் தமிழகம் முழுவதும் வருகிறது. அதன்படி இன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் முத்தமிழ் தேர் வாகனம் வந்தது. இதனை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்வது என்பது அவர்களது வேலை. அதில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு செய்யும் பணி தடைப்படாது. தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது. இதை திட்டமிட்டு செய்யவில்லை; தானாக நடக்கிறது. இதை தடுப்பது கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதை தடுத்திட வேண்டும் என்று நினைக்க முடியாது. அந்த காலகட்டத்தில் அவர்களது சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள்.
மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். மதுவிற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கையை செய்து வருகிறோம். டெட்ரா பாக்கெட் பற்றி ஆய்வறிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மது பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது” என்றார்.
பொங்கலுக்கு மதுக்கடை குறைப்பது குறித்து அறிவிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, “பொங்கலுக்கு பொங்கல் கொடுப்பீர்களா என்று கேட்டால் நன்றாக இருக்கும். மது கடைகள் குறைப்பது குறித்து சொல்ல முடியாது” என்றார்.