கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் பூரண நலம்பெற வேண்டி மன்னார்குடியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டும் என அ.தி.மு.க.வினர் ஆனந்த வினாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து உள்ளிக்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் ஆலயங்களில் பால், பன்னீர், மஞ்சள், தேன், சந்தனம் இவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
இது குறித்து மன்னார்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு கெடுபிடியாக இருந்த காலத்தில்கூட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தனது ஆதரவாளர்களோடு பல நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்பு எனத் தன்னை பரபரப்பாகக் காட்டிக் கொண்டார். இதனால், அவரோடு பயணித்த அவரது ஆதரவாளர்களும்கூட நோய்த் தொற்று வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் உறைந்திருந்தனர். (இதனை நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்) இந்தச் சூழலில் தற்போது கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார் அமைச்சர் காமராஜ். ஆனால், சுய உதவிக்குழு பெண்களைச் சந்தித்தது, மாணவ, மாணவிகளைச் சந்தித்தது, விவசாயிகளைச் சந்தித்தது, இறுதியாக பொங்கல் பரிசுப் பொருளை ஊர் ஊராகச் சென்று துவக்கிவைத்தது என பல பணிகளில் இருந்தார். இந்நிலையில், அவரை சந்தித்த மக்களும் நிர்வாகிகளும் அச்சத்தில் உள்ளனர்.
நோய்த் தொற்றிலிருந்து பூரன நலம்பெற வேண்டும். அதேபோல அவரிடம் நிவாரணப் பொருட்களை வாங்கிய பொதுமக்களையும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என்றார்.