சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தோம். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால்தான் மருத்துவக் கலந்தாய்வு நடத்த முடியும் எனவும் கூறினோம். மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆளுநர் கூறினார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்". இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள், 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆளுநர் கூறியது பற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமளித்தனர்.