Skip to main content

“சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும்" - அமைச்சர் கணேசன் அறிவிப்பு

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

minister kanesan said modern hospital will set up Chennai Trichy National Highway

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் நவீன மருத்துவமனை அமைக்கப்படும்" என அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார். 

 

கடலூர் மாவட்டம் மங்களூரில் உள்ள மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதனையடுத்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முயற்சியால் சுமார் ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

 

அதன்பிறகு பேசிய, "பண்ருட்டி மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதிகளுக்கு 10 கோரிக்கைகளை பெற்று அதை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் வேப்பூர் - இராமநத்தம் இடையே நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மங்களூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சிறுபாக்கத்தில் புதிய மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சுமார் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை பெற்று சுமார் 80 கிராமங்கள் பயன்பெறும் வகையில் நீர்த்தேக்கம் சீரமைக்கப்படும். அரசு செயல்படுத்தி வரும் திட்டப்பணிகளை அதிகாரிகள் துரிதமாக நிறைவேற்றும் என்று நிறைவேற்ற வேண்டும்” என்றார்  

 

இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், முருகன், மங்களூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுகுணா சங்கர், துணைத் தலைவர் கலைச்செல்வி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

 

இதேபோல் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மங்களூர் ஒன்றியம் தொண்டங்குறிச்சி கிராமத்தில் ரூ.7.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சிமன்ற கட்டிடத்தையும், ஐவனூரில் 8.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலை கட்டடத்தையும் அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்