Skip to main content

அமைச்சரின் நகைச்சுவை பேச்சு; கலகலப்பான கூட்டத்தினர்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

minister duraimurugan speech in katpadi meeting

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மேல்பாடி பொன்னை ஆற்றின் குறுக்கே 32 கோடியே 46 லட்சத்தில் புதிய தரைப்பாலம் மற்றும் அணைக்கட்டை புனரமைக்கும் பணிக்கு மாநில நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் மற்றும் மேம்பாலம் நீண்ட காலம் உழைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னையில் நூறு படுக்கையை கொண்ட மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் பொன்னை அருகே மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. காட்பாடி அருகே காங்கேயநல்லூர் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே 100 கோடியில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி சில தினங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் காட்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.

 

காட்பாடி அருகே மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி,  நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும். சென்னை முதல் பெங்களூர் வரை விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் காட்பாடி அருகே மேல்பாடியில் மட்டுமே நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்திலும் பேருந்துகள் நிற்காது. மேல் பாடியில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

தொடர்ந்து தாய் பாசம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பட்டினத்தார் தன் தாயின் மரணத்தில் உடல் நோக என்னை பெற்றெடுத்தாயே இன்று இறந்து விட்டாயே என்று கதறி அழுதபோது ஒரு பிறப்பின் வலியை தாயாக இருந்து உணர்ந்து பாடிய பாடலை அமைச்சர் துரைமுருகன் மேற்கோள் காட்டி, அந்த காலத்தில் கால் விரல் நுனியில் இருந்து உச்சந்தலை வரை வலி எடுத்து உடல் நோக குழந்தையை பெற்றெடுத்தாள் ஒரு தாய். தற்பொழுது தலையணையில் இருந்து பஞ்சை பிரித்து எடுப்பது போல் கத்திரிக்கோலால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்து பார்த்து இது என்ன என்று தாய் கேட்க, அது உன் குழந்தை தான் என மருத்துவரும் பதில் அளிக்க, ஓ அப்படியா என்று தாயும் கேட்கிறாள். அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் குழந்தையின் மீது பாசம் குறைந்து விடுகிறது” என அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேச... சில மகளிர் சிரிக்க சில பெண்கள் தன்னை மறந்து அழுதனர். அதனால்தான் கோபத்தில் குழந்தையை பொத்து பொத்து என்று அடித்து விடுகிறார்களோ எனத் தோன்றுகிறது என்றும் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்