தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்சினையே இல்லை, பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே என்றால், அப்படியா சந்தோஷம் என்பார். அதை மகிழ்ச்சியாக சொல்கிறாரா, என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? எனப் புரியாது” எனப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் பேசியது கூட்டத்தில் இருந்த அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “அதே மாதிரிதாங்க. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு” எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், அமைச்சர் துரைமுருகன் பேசியதில் வருத்தமில்லை என்றும், அவர் உடனான நட்பு தொடரும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதே சமயம், தங்களின் நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்றும், நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது, “மற்ற மாநிலத்தில் எல்லாம், தோற்ற கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் எவன், ‘அண்ணா’ பெயரை சொல்கிறானோ அவன் மட்டும் தான் ஆட்சிக்கு வர முடியும். இன்றைக்கு இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். நாங்கள் எல்லாம் இளைஞர்களாக தான் வந்தோம். இளைஞர்கள் இல்லாமல் இருந்தால், இந்த கட்சியே போய்விடும். எனவே, இளைஞர்களுக்கு அனைவரும் வழிவிடுங்கள். ஆனால், வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். வந்த உடனேயே என்ன கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள்.
ஏனென்றால் உங்களை விட உழைத்தவர்கள், அடிப்பட்டவர்கள், உதைப்பட்டவர்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் என நிறைய பேர் இங்கு உள்ளனர். அவர்கள் இந்த கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். அரசியல் என்பது பொழுதுபோக்கு படமல்ல, அரசியல் என்பது வியாபாரம் அல்ல. அரசியல் என்பது கொள்கைப் பிடிப்பு. இதையெல்லாம் உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இளைஞர்கள் தொடர்பான பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இளைஞர்கள் தொடர்பான அமைச்சர் துரைமுருகனின் பேச்சு மீண்டும் பேசுபொருளாகி மாறியுள்ளது.