தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 184 ஆவது பிறந்தநாள் இன்று (15-01-25) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணி மண்டபத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் வைத்து ஜான் பென்னிகுயிக்கை வழிபட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, கர்ணல் பென்னிகுவிக் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதை தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் பென்னிகுவிக்கின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். ஐந்து மாவட்டம் செழிப்பாக இருக்க காரணமாக விளங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான். முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பினை பெற்று தந்தார். இரு மாநில உரிமை சம்பந்தப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார், பேபி அணையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.