மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தது. பின்னர் அந்த தண்ணிர் கும்பகோணம் அருகேயுள்ள கீழணைக்கு வந்தடைந்தது இதனை 11-ந்தேதி பாசனத்திற்காக கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கீழணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசின் கொரடா ராஜேந்திரன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், கீழணையில் இருந்து விவசாயிகளின் பாசன்த்திற்கு விகிதாச்சாரம் அடிப்படையில் வடவாறு வாய்க்கால் மூலம் 1800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி, தெற்குராஜன் வாய்காலில் 400 கனஅடி திறக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக வடக்கு ராஜன் வாய்க்கால் கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வடவாறு வாய்க்கால் உள்ள மொத்தம் 47 ஆயிரத்து 997 ஏக்கர் பாசன பரப்பும், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு கொள்ளிடம் தெற்கு ராஜ வாய்க்கால், குமுக்கிமன்னியார், மேலராமன் வாய்கால், விநாயகன்தெரு வாய்கால்கள் மூலம் நேரடிப் பாசனமாக மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பிற்கு பாசன வசதி பெறுகிறது. மூன்று மாவட்டங்களில் மொத்தம் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அவ்வபோது பாசனத் தேவைகேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் போதுமான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
முன்னதாக வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு ராதா மதகு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 10 கனஅடியும், வீராணம் புதிய மதகு வழியாக 74 கனஅடியும், ஏரியில் உள்ள மொத்தம் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்துவைத்தனர். இதன்மூலம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 102 கிராமங்களில் 44856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும்.
வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு காலங்கடந்து தண்ணீர் திறந்திருந்தாலும் மகிழ்ச்சியே. ஏரிக்கு கடந்த மாதம் 22-தேதி தண்ணீர் வந்த போதே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் சார்பாகவும். விவசாய சங்கங்களின் சார்பாக கேட்டும் திறந்து விடவில்லை. தற்போது தண்ணீர் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலில் விடுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். மேலும் மாவட்ட அமைச்சர் வெளிநாட்டில் சுற்று பயணத்தில் இருந்ததால்தான் தண்ணீர் திறக்க காலதாமதம். தண்ணீர் ஏரிக்கு வந்தவுடன் திறந்திருந்தால் அனைத்து விவசாயிகளும் நாற்று விட்டு நடவு நட்டிருப்போம்.
தற்போது நேரடி நெல் விதைப்பால் களை எடுத்து மாளாது. களை கொல்லி மருந்து அடிப்பதால் மண் மலடாகும். விவசாயிகள் நாங்கள் என்ன பாவம் செய்தோம். நெல்லுக்கும் போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது குடிமராமத்து பணி பெயரலவில்தான் நடைபெற்றுள்ளது. அந்த பணியும் பாதியிலேயே நிற்கிறது. இனி வரும் காலங்களிலாவது விவசாயிகள் தண்ணீர் கேட்கும் போது கொடுக்க வேண்டும். வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்களும் வழங்கிட வேண்டும். ஒரு சில வாய்கல்களில் உடைப்பு மற்றும் தண்ணீரே பாசனத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு உள்ள வாய்கால்களை போர்கால அடிப்படையில் அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று வீராணம் ஏரி பாசன சங்க தலைவர் பாலு, ராதா வாய்கால் பாசன சங்க தலைவர் ரெங்கநாயகி உள்ளிட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.