
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்திற்குக் குறைவாக மதிப்பெண் (30 சதவீதம்) எடுக்கக்கூடிய மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பதற்கான நடைமுறை என்பது அமலுக்கு வர உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி (18.03.2025) சி.பி.எஸ்.இ. சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி வீதத்திற்குக் குறைவாக மதிப்பெண் பெறக்கூடிய 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களிடம், ‘என்னுடைய குழந்தைகள் குறைவான மதிப்பெண்களை எடுத்திருந்தால் அவர்களை மீண்டும் அதே வகுப்பில் சேர்க்கலாம்’ என்ற ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்குக் கல்வியாளர்கள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்களைப் பாதுகாத்துள்ளோம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சட்டத்தை மாற்றி பெயில் ஆனால் பெயில் என்று சொல்லும் போது இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதை உணர வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத்தில் தேசிய கல்விக்கொள்கை விளையாடும் போது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
தயவுசெய்து இது போன்று ஏதாவது பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு 5ஆம் வகுப்பில் உங்கள் குழந்தை பெயில் என்று ஒப்புக்கொள்ளக் கூறினால் தயவுசெய்து எதிர்த்து கேள்வி கேளுங்கள். இது எப்படிச் சாத்தியப்படும் என்று எதிர்த்து கேள்வி கேளுங்கள். பள்ளிகல்வித்துறை அமைச்சராக இதை வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. எனக்கு மேல் இருக்கின்ற தலைமை ஆசிரியராக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பான செய்தி வெளியான அடுத்த நிமிடமே இது சார்ந்து உடனடியாக தெளிவான ஒரு செய்தியைப் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை மூலமாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லியுள்ளார்” எனப் பேசினார்.