திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோமையார் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவிகளின் வாசிப்புத் திறன் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடங்களை வாசிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சத்தமாக வாசிக்க வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடையே உரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பொதுத்தேர்வுகளை தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் பின்னர் பள்ளியின் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டார்.
சீருடை அணியாத மாணவி ஒருவர் தனக்குப் பிறந்தநாள் என்று கூற அந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் வருகை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரி, அருட்தந்தை பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.