திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட 2,673 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பழனி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
வருகிற மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு மூன்று அடுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தமிழக காவல்துறை மற்றும் எல்லைப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை காவலர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பணியில் இருந்த காவலர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அவருடன் தங்கியிருந்த துணை ராணுவ படையினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்குப் பரிசோதனை நடைபெற உள்ளது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் தங்கியிருந்த அறை முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.