மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கோவை அடுத்த மேட்டுப்பாளையத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் உரங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மருத்துவமனை வளாகத்தில் உயிர் இறந்தவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற்றுச் செல்ல மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தின் போது கைதான 24 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடி உத்திரவை பிரப்பித்துள்ளது.