காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம் மீது நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகப் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருணை இல்லத்தில் தங்கியிருந்த பலர் வேறு இல்லங்ளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் முதியோர் இல்லத்தை ஏன் மூட கூடாது என என்று வருவாய் கோட்ட அலுவலர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நோட்டீஸை எதிர்த்து இல்லத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் கருணை இல்லத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.