காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் தா.மோ அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நடத்தினர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''நல்லா குழந்தையை பெற்றெடுங்க. பெற்றெடுக்கும் குழந்தைக்கு தமிழில் அழகாக பெயர் வையுங்கள் அதான் முக்கியம். எங்க ஊரில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றிற்கு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்விற்கு சென்றிருந்தேன். சுமார் 800 பேர் படிக்கும் அந்த பள்ளியில் நோட்டு புத்தகங்களை கொடுக்கும்பொழுது ஒவ்வொரு மாணவரிடமும் பெயரை கேட்டேன். சுமார் 50 பேரிடம் பெயர் கேட்டிருப்பேன். உண்மையில் வயிறெரிஞ்சி சொல்கிறேன் அதில் நான்கு பேர் மட்டும்தான் தமிழ் பெயரை சொன்னார்கள். மற்றவர்களெல்லாம் தஸ்ஸு... புஸ்ஸுன்னு தான் பெயர் வைத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சநாள் போச்சுன்னா நம்ம கதையே இருக்காதுபோல. அதனால் வீட்டுக்காரர் சொன்னாலும் கேட்காதீங்க, மாமியார் சொன்னாலும் கேட்காதீங்க, ஜாதககாரரிடம் கூட்டிட்டுபோய் பெயர் வெச்சுக்குடுங்கனு கேக்காதீங்க. பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அழகான தமிழ் பெயரை வையுங்கள்'' என்றார்.