தமிழ்நாட்டு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலின் இருவரது நினைவிடங்களிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.